தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அரசு முறைப் பயணமாகத் டெல்லி சென்றுள்ள விஜய், அங்கு பல்வேறு முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். நிர்வாக ரீதியிலான இந்த சந்திப்புகளுக்கு இடையே, முதல்வர் விஜய்யின் நெற்றியில் இருந்த ‘பொட்டு’ மாற்றம் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் ஒரு சுவாரசியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்த போது கறுப்பு நிற ‘அரகஜா’ பொட்டு வைத்திருந்த அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த போது ‘சிவப்பு நிற குங்குமப் பொட்டு’ வைத்திருந்ததுதான் இந்த விவாதத்திற்குக் கிளப்பியுள்ளது.
டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக, குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், முதல்வர் விஜய்யின் நெற்றியில் கறுப்பு நிற ‘அரகஜா’ திலகம் இடப்பட்டிருந்தது உற்றுநோக்கப்பட்டது. ஆன்மீக ரீதியாக, தீய சக்திகளில் இருந்து காக்கவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் இந்த அரகஜா திலகம் வைப்பது வழக்கமாகும். ஆன்மீக அடையாளங்களை அதிகம் விரும்பும் மற்றும் பாஜாக பின்னணி கொண்ட தலைவரைச் சந்திக்கும் போது, இந்த குறிப்பிட்ட திலகத்துடன் விஜய் சென்றது தற்செயலானதா அல்லது ஏதேனும் திட்டமிட்ட அரசியல் குறியீடா என்ற கேள்விகள் இதன் மூலம் எழுந்தன.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்கச் சென்ற போது, முதல்வர் விஜய்யின் நெற்றியில் பளிச்சென்று ‘சிவப்பு நிற குங்குமப் பொட்டு’ இடம் பெற்றிருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பிற்குச் செல்லும் வழியில் அல்லது தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போது, இந்த மங்களகரமான குங்குமத் திலகம் மாற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரு முக்கிய சந்திப்புகளில் நெற்றிப் பொட்டு நிறம் மாறியது ஏன் என்ற விவாதம் உடனே சூடுபிடிக்கத் தொடங்கியது.
பொதுவாகச் சிவப்பு குங்குமம் என்பது மதச்சார்பற்ற மற்றும் அனைவருக்குமான ஒரு பொதுவான கலாச்சார அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய ‘பொட்டு வைக்காத’ கொள்கைக்கு மாற்றாக, ஆரம்பத்திலிருந்தே தனது ‘மதச்சார்பற்ற ஆன்மீக அரசியலை’ வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தி வரும் முதல்வர் விஜய், டெல்லி அரசியலிலும் தமக்கே உரிய தனித்துவமான பாணியைக் காட்டியுள்ளதாக அவருடைய ஆதரவாளர்கள் சிலாகித்து வருகின்றனர். தலைவர்களின் பின்னணிக்கு ஏற்ப திலகத்தை மாற்றியது சாணக்கியத்தனமா அல்லது இயல்பான ஒன்றா என்ற விவாதம் தற்போதைய டெல்லி பயணத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
