தமிழ் திரையுலகின் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்படும் பாரதிராஜா, தனது 84-வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வரும் நிலையில், பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னணி நடிகர் நெப்போலியன் அமெரிக்காவிலிருந்து மிகவும் உருக்கமான இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “இன்று காலை எனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது. என்னுடைய குருநாதர் பாரதிராஜா இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட உடனே, இது பொய்யாகவோ அல்லது வெறும் வதந்தியாகவோ இருக்குமோ என்றுதான் நினைத்தேன். ஏனெனில், ஒரு மாதத்திற்கு முன்புகூட இதேபோன்ற வதந்தி வந்தபோது அவரது மகள் ஜனனியிடம் பேசி தெளிவுபடுத்திக் கொண்டேன். ஆனால், இம்முறை ஜனனியைத் தொடர்புகொண்டபோது, அவர் மலேசியாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், அப்பா தவறிவிட்டார் என்றும் கண்ணீருடன் கூறினார். அதன் பிறகே இந்தத் துயரச் செய்தியை என்னால் நம்ப முடிந்தது. நேற்றிரவு முழுவதும் தொலைக்காட்சியில் இதைப் பற்றிய செய்திகளையே பார்த்துக் கொண்டிருந்ததால் எனக்குத் தூக்கமே இல்லை” என்று நெப்போலியன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜாவுக்கும் தனக்குமான உறவு குறித்துப் பேசிய அவர், “அரசியலில் எனக்கு எப்படிக் கலைஞர் கருணாநிதி குருவோ, அதேபோல் சினிமாவில் என்னுடைய ஒரே குருநாதர் பாரதிராஜா சார்தான். 1990-ல் அவரை முதன்முதலாகச் சந்தித்த நாளில் இருந்து, ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தின் மூலம் என்னை அவர் திரையுலகில் அறிமுகப்படுத்தியது வரை எங்கள் பந்தம் தொடங்கியது. 1993-ல் கலைஞர் தலைமையில், என்னுடைய குருநாதர் முன்னிலையில்தான் எனக்குத் திருமணமே நடந்தது. அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக, எங்கள் குடும்பத்தில் ஒருவராக அவர் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மகனின் திருமணத்திற்கு நேரில் சென்று அவருக்கு நான் அழைப்பிதழ் கொடுத்தது வரை எங்களுக்குள் இருந்த உறவு மிகவும் பலமாக இருந்தது” என்று நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.
மேலும், தம்மால் இறுதிச் சடங்கில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழல் குறித்து வருத்தம் தெரிவித்த நெப்போலியன், “அவரது உடல் இறுதிச்சடங்கிற்காகச் சொந்த ஊரான தேனிக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலையில் நான் இருக்கிறேன். இல்லையென்றால், என் குருநாதரின் இறுதி யாத்திரையில் முதல் ஆளாக நான் வந்து நின்றிருப்பேன். நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு முதல் முதலில் நடிப்பைச் சொல்லிக் கொடுத்து, வளர்த்து ஆளாக்கியவர் அவர். மூன்று மாதங்களுக்கு முன்புதான் என்னிடம் போனில் பேசினார், அடுத்த மாதமே இந்தியா வந்து அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், அதற்குள் இப்படி நடந்துவிட்டது” என்று கூறி, தன் குடும்பத்தின் சார்பாகக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
