தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கிப் புறப்பட்டார். முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான முதற்கட்ட நகர்வாக இந்தச் சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதால், ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள பகுதிகளில் தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
இருப்பினும், ஆளுநர் மாளிகையை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் விஜய்யின் கார் திடீரென ‘யு-டர்ன்’ செய்து மீண்டும் தனது இல்லத்திற்கே திரும்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரைச் சந்திக்க முன்கூட்டியே அனுமதி கோரப்பட்டிருந்தும், ஆளுநர் தரப்பில் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. பெரும்பான்மை பலம் இருந்தும் சந்திப்பிற்கு அனுமதி தாமதமாவதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க விஜய் மீண்டும் தனது இல்லத்திற்குத் திரும்பியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
