தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில், தலைவர் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுடன் வர வேண்டாம் என கட்சித் தலைமை முன்னரே அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், அந்தத் தடையையும் மீறி ஏராளமான தாய்மார்கள் தங்களது பிஞ்சுக் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்து விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் ரசிகை ஒருவர் தனது கைக்குழந்தையுடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது மகளை விட எனக்குத் தலைவர் விஜய்யைத்தான் அதிகம் பிடிக்கும்” என உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார். விஜய்யின் மீதான இந்தப் தீவிரப் பாசத்தை வெளிப்படுத்தும் அவரது பேட்டி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அதேவேளையில், வெயில் மற்றும் நெரிசலுக்கு இடையே குழந்தைகளை அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
