தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முதல்வர் விஜய். குறிப்பாக, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு அவர் பிறப்பித்த உத்தரவு, பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வழிபாட்டுத்தலங்கள் அருகில் 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 255 கடைகள் என அடையாளம் காணப்பட்டு, தற்போது அவை தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.
டாஸ்மாக் கடைகளை மூடுவதோடு மட்டுமின்றி, அதன் பக்கவிளைவாக உருவாகும் கள்ளச்சந்தை மது விற்பனையை முற்றிலும் ஒழிக்க முதல்வர் விஜய் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், பல இடங்களில் அதற்குப் பின்பும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகக் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டு, சென்னை திருவொற்றியூர் காவல் எல்லைக்குள் கள்ளச்சந்தை விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் ஒரு காவல் ஆய்வாளர் இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சந்தை மது விற்பனையைத் தடுக்க ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய போலீசார் சாதாரண உடையில் (மஃப்டியில்) ரோந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கூடங்கள் (பார்கள்) முற்றிலும் மூடப்பட்டதை உறுதி செய்யும் வகையில், அதனைப் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், 10 மணிக்கு மேல் யாராக இருந்தாலும் பாரை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் மதுவிலக்கு மற்றும் கள்ளச்சந்தை ஒழிப்பில் முதல்வர் காட்டி வரும் இந்த வேகம், சாமானிய மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. அரசின் இந்த அதிரடி உத்தரவுகளையும், புதிய கட்டுப்பாடுகளையும் டாஸ்மாக் ஊழியர்களும், காவல்துறையினரும் தங்களின் சுயலாபங்களுக்கு இடம் தராமல் தரைமட்டத்தில் எந்தளவுக்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவார்கள் என்பதே தற்போதைய சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
