விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாணியிலான அதிரடி அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக, ஆட்சி அமைக்க இன்னும் 12 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் உள்ளது. மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரும்போது அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு (கூட்டணி ஆட்சி) கேட்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தால், தவெக-வால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது என விஜய் கருதுகிறார். எனவே, 2013-ல் டெல்லியில் குறைந்த இடங்களைப் பெற்றபோது கெஜ்ரிவால் எடுத்த முடிவைப் போல, அதிகாரத்திற்காகக் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இருக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் இரண்டு வார காலமே அவகாசம் உள்ள நிலையில், தனது கட்சி நிர்வாகிகளிடம் விஜய் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். “நிபந்தனையுடன் ஆதரவு கரம் நீட்ட வரும் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம்” என்று அவர் கறாராகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. கூட்டணி ஆட்சி என்ற பெயரில் மற்ற கட்சிகளின் தலையீடு இருப்பதை விட, பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் பதவியைத் துறப்பதே மேல் என்ற முடிவில் அவர் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை தவெக-வால் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகலாம். அப்படித் தேர்தல் நடந்தால், தற்போது கிடைத்துள்ள வெற்றியை விடப் பிரம்மாண்டமான வெற்றி தவெக-விற்குக் கிடைக்கும் என்றும், அப்போது தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் கோட்டையைப் பிடிக்கலாம் என்றும் விஜய் நம்புகிறார். 2015-ல் கெஜ்ரிவால் மீண்டும் தேர்தலைச் சந்தித்து எப்படித் தனிப்பெரும் வெற்றி பெற்றாரோ, அதே போன்ற ஒரு மாபெரும் வெற்றியை மக்கள் தமக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் விஜய் இந்த ‘ரிஸ்க்’ எடுக்கத் துணிந்துள்ளார்.
