சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), முதல்வர் விஜய்யின் மக்கள் வரவேற்போடு அடுத்தகட்டமாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. திமுகவை வீழ்த்த வலுவான கட்டமைப்பு தேவை என்பதால், அதிமுகவின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் முக்கியப் புள்ளிகளை தவெக தன்வசம் இழுத்து வருகிறது. மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ கார்த்திகேயன் மற்றும் மாவட்டச் செயலாளர்களான கல்லணை, தங்கப்பாண்டி, மருதுபாண்டி ஆகியோர் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அதிமுகவின் கட்டமைப்பு தவெகவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த அசுர வளர்ச்சியைத் தாண்டி, தவெகவிற்குள் தற்போது ஒரு புதிய சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் பெறுவதற்காக, புதியதாக இணைந்தவர்களிடம் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் ரூ.15 லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த சட்டசபைத் தேர்தலின் போது இதேபோல் சீட் வழங்க ரூ.2 கோடி வரை பணம் கேட்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதே பாணி வசூல் அரங்கேறி வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தவெகவின் ஆரம்பகால உண்மையான தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொடங்கிய காலம் தொட்டு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் நின்று உழைத்த தங்களை ஓரங்கட்டிவிட்டு, இப்போது பண பலத்தோடு அதிமுகவிலிருந்து புதிதாக ஓடி வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதா என்று அவர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். தங்களின் உழைப்புக்கு மதிப்பில்லாமல் போகிறதோ என்ற ஆதங்கத்தில், தவெகவிற்குள் தற்போது ஒரு கடுமையான உட்கட்சிப் பூசலும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
“கவுன்சிலர் சீட்டுக்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறுவது கட்சித் தலைமைக்கு, குறிப்பாக முதல்வர் விஜய்க்குத் தெரியுமா?” என்ற சந்தேகக் கேள்வியை தவெகவின் அடிமட்டத் தொண்டர்கள் எழுப்பி வருகின்றனர். முதல்வர் விஜய்யின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் சில மாவட்ட நிர்வாகிகள் சுயநலத்தோடு இந்த கலெக்ஷனில் ஈடுபடுகிறார்களா அல்லது தலைமைக்குத் தெரிந்தே இது நடக்கிறதா என்ற குழப்பம் நீடிக்கிறது. எது எப்படியோ, உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் எழுந்துள்ள இந்த ‘ரூ.15 லட்சம்’ வசூல் சர்ச்சை, தவெகவின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
