ராயப்பேட்டையில் புதிய வீட்டிற்கு பால் காய்ச்சிய இபிஎஸ்…! 15 வருடம் கழித்து அரசு  பங்களாவை காலி செய்தது ஏன்..?

By Swetha on வைகாசி 29, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ‘செம்பருத்தி’ என்ற அரசு பங்களாவை காலி செய்துவிட்டு, ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர உள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற போது இந்த அரசு பங்களாவிற்குள் குடிபுகுந்த அவர், சுமார் 15 ஆண்டுகள் அங்கு வசித்து வந்தார். இந்த காலகட்டத்தில் அவர் அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என பல முக்கிய அரசியல் பொறுப்புகளை இந்த வீட்டில் இருந்தபடியே வகித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைக்கவில்லை. இந்த சிறப்பு அந்தஸ்து இல்லாத காரணத்தினால், விதிகளின்படி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிரே, பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான வீட்டிற்கு மாற முடிவு செய்தார்.

   

சுபமுகூர்த்த நாளான இன்று அதிகாலையிலேயே எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டிற்கு வருகை தந்து, அங்கு பாரம்பரிய முறைப்படி பால் காய்ச்சி புதுமனை புகுவிழா நடத்தினார். அவரது அரசியல் வாழ்வின் முக்கிய அடையாளமாக விளங்கிய அரசு பங்களாவை காலி செய்துவிட்டு, தற்போது கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மிக அருகிலேயே அவர் குடிபெயர்ந்திருப்பது அதிமுகவினர் இடையே கவனத்தைப் பெற்றுள்ளது.