தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்கா ஆகிய இடங்களுக்கு இன்று (மே 2) மேற்கொள்ளவிருந்த ஆன்மீகப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் ஷீரடி சாய் பாபா கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்று அவர் தரிசனம் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் நாகூர் மற்றும் வேளாங்கண்ணிக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் விஜய் வருகை தரும் பகுதிகளில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டுக்கடங்காத அளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, காவல்துறையின் ஆலோசனைப்படி இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 4-ம் தேதி பனையூரில் கட்சி வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் தயாராகி வரும் சூழலில், இந்தத் திடீர் ரத்து அவரது ஆதரவாளர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
