தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தொங்கு சட்டசபை அமைந்தால் ‘கிங் மேக்கர்’ ஆக உருவெடுக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற பெரிய கட்சிகளின் குதிரை பேரத்திற்குத் தங்கள் கட்சி வேட்பாளர்கள் அடிபணியக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக, வெற்றி பெறும் வேட்பாளர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதி அன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு வர வேண்டும் என அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காமாக்யா அனலிட்டிக்ஸ் (Kamakhya Analytics) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) முடிவுகள் இந்த எதிர்பார்ப்புக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளன. அதன்படி, திமுக கூட்டணி 95 இடங்களையும், அதிமுக கூட்டணி 84 இடங்களையும், தவெக 81 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எந்தவொரு தனிப்பட்ட கூட்டணியும் எட்டாத சூழல் உருவாகும் என இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தக் கணிப்புகள் உண்மையானால், ஆட்சி அமைப்பதில் தவெக-வின் ஆதரவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும். இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதி அன்று கட்சியின் வெற்றி வேட்பாளர்களைப் பாதுகாப்பாக ஒருங்கிணைத்து, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்க விஜய் முடிவு செய்துள்ளார். தொங்கு சட்டசபை ஏற்பட்டால் விஜய்யின் இந்த ‘கிங் மேக்கர்’ கணக்கு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
