தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தனது சனிக்கிழமை சுற்றுப்பயணத்தை ஒத்தி வைப்பது தொடர்பாக விஜய் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதால் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வது எப்படி எனவும் ஆலோசனை நடத்த உள்ளார். முதல் கட்டமாக அக்டோபர் 4 ஆம் தேதி அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெற இருந்த திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை பிரச்சாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
