தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
2000 களில் தன்னுடைய ரூட்டைக் கண்டுபிடித்து கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களாக நடித்துத் தள்ளினார். அதன் பயனாக இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கிறார். ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு அவரின் மாஸ் தற்போது உயர்ந்துள்ளது.
விஜய்யைப் பொருத்தவரை அவர் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டால், அந்த படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் குறித்த தேதியில் ரிலீஸாகிவிடும். அவரால் எந்த படமும் தாமதம் ஆனதில்லை. அதைப் போல அவர் நடிப்பில் தொடங்கப்பட்ட எந்த படமும் பாதியில் நின்றதில்லை.
ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் அவர் விக்ரமன் இயக்கத்தில் நடிக்க இருந்த உன்னை நினைத்து படத்தின் ஷூட்டிங்கின் போது கதைப் பிடிக்காமல் இயக்குனரிடம் சொல்லிக்கொள்ளாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறி விட்டாராம்.
அப்போது அது சம்மந்தமான பஞ்சாயத்து நடந்த போது, விஜய் செய்தது தவறுதான் என ஒப்புக்கொண்ட எஸ் ஏ சந்திரசேகர், அவரை தயாரிப்பாளர் கவுன்சிலில் உட்காரவைத்து அவரை இயக்குனர் விக்ரமன் மற்றும் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்க வைத்தாராம். மேலும் அதே தயாரிப்பாளருக்கு வேறு படம் நடித்துக் கொடுக்க சொல்லி, அவருக்கு நஷ்டம் வராமல் பார்த்துக் கொண்டாராம். இதை அவரே தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.