பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஆலயத்தில் வைத்து இறுதி பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் மீராவின் உடல் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மகள் இறந்த பிறகு விஜய் ஆண்டனி சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்தார்.

அதில் எனது மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். தற்போது எனது மகள் ஜாதி, மதம், பணம், பொறாமை அற்ற அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். தனது மூத்த மகள் இறந்த துயரமான சம்பவத்திலிருந்து மீண்டு வருவதற்குள் தன்னை நம்பிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதற்காக விஜய் ஆண்டனி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர் கனத்த இதயத்தோடு கண்கள் முழுக்க சோகத்தோடு ப்ரோமோஷனில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்த பலரும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் மன தைரியத்தை தர வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.
