தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியில் நிர்வாகிகள் பலரை நீக்கினாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக விஜய் அதிமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. திமுக அணியிலிருந்து விலக காங்கிரஸ் தயங்குவதால் மீண்டும் அதிமுகவை விஜய் பரிசீலனை செய்து வருகிறாராம். அப்படி அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டால் கணிசமான இடங்கள் வெல்வதுடன் கரூர் வடக்கையும் சமாளித்து விடலாம் என்று நம்புகிறாராம். விரைவில் நேரடியாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
