வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்று வருகிறது. முதல் பாகம் முழுவதும் சூரியை சுற்றியே கதை நகர்ந்த நிலையில் வாத்தியாராக நடித்திருந்த விஜய் சேதுபதி போலீசிடம் சிக்குவதோடு விடுதலை படம் முடிந்திருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை விஜய் சேதுபதியின் இளமைக்காலம், அவர் வாத்தியாராக மாறுவது, ஆயுதம் ஏந்திய போராட்டத்தை அவர் முன்னெடுக்கும் சூழலை உருவாக்கியது யார் என்ற பல கேள்விகளுக்கு விடை அளிப்பதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுத்த போராட்டங்கள் என பலவற்றை விடுதலை 2 படம் பேசி உள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விடுதலை 2 படத்தை நேற்று பார்த்துவிட்டு படத்தை பாராட்டி படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள விடுதலை 2 படம் பார்த்தோம். இந்த திரைப்படம் முக்கியமான அரசியலை பேசி உள்ளது. இடதுசாரி அரசியலின் தேவையை உணர்ந்து முக்கியமான கால சூழலில் இந்த படம் வெளியாகி உள்ளது.

வலது சாரி அரசியல் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி மேலோங்கி வரக்கூடிய நிலையில் விடுதலை 2 திரைப்படம் இடதுசாரி அரசியல் கருத்தை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை இயக்கியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதன்படி இதுவும் ஒரு வெற்றிகரமான திரைப்படம் தான். அதே சமயம் இந்த படம் பேசி உள்ள அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசுகிற அரசியல் ஒன்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தை மறுத்து மக்களை அரசியல் படுத்தி புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் என பேசுகிற அரசியல் மற்றொன்று.

மக்களை அரசியல் படுத்தி அமைப்பாக்கி போர் குணம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய அரசியல் இன்று இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசியல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த வகை அரசியலை நுட்பமாக விவாதிக்கிற களமாக தான் விடுதலை பாகம் 2 அமைந்துள்ளது. ஆதிக்கம், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும். கோட்பாடு இல்லாத தலைவர்கள் ரசிகர்களை தான் உருவாக்குகிறார்கள் என்ற வசனம் யாரையும் மனதில் வைத்து இந்த வசனம் எழுதப்படவில்லை. இது உலகத்திற்கே பொருந்தக்கூடிய கருத்துதான் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
