பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டங்கள், சமூக வலைதளங்களில் ‘சாத்தானிய கலாச்சாரம்’ எனக் கூறி கடும் விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகியுள்ளன.
பாகிஸ்தானின் லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் லாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் ஹாலோவீன் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர். இதில் பங்கேற்ற மாணவர்கள் விசித்திரமான, பயங்கரமான பேய் உருவ உடைகளை அணிந்து விக்டோரியன் பாணி ஹாரர் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
https://www.instagram.com/reel/DfKlmC3OyjA/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==
இந்தக் கொண்டாட்டங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். “பாகிஸ்தானில் என்ன மாதிரியான கலாச்சாரம் ஊக்குவிக்கப் படுகிறது? இது சாத்தானிய வழிபாட்டு முறை மற்றும் இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேற்கத்தியப் பழக்கவழக்கங்களை அப்படியே பின்பற்றுவது தவறு என ஒரு தரப்பினரும், இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்வு மட்டுமே என மறுதரப்பினரும் விவாதித்து வருவதால் பாகிஸ்தான் இணையவெளியில் இச்செய்தி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
