இந்தியாவில் வசிக்கும் சோஃபியா என்ற ரஷ்ய பெண், தனது கர்ப்ப காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றும் சவால்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வசித்து வரும் இவர், வெளிநாட்டில் முதல்முறையாகத் தாயாகப்போகும் சூழலில், இந்திய பண்பாடு, கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணமாகத் தான் சந்தித்த 4 முக்கிய சவால்களைப் பற்றி இதில் பேசியுள்ளார்.
முதலாவதாக, இந்தியாவில் கர்ப்பிணிகள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவும் நிலையில், உடற்பயிற்சியும் நடைபயிற்சியும் அவசியம் எனத் தான் நம்புவதாக சோஃபியா குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக, ஆடைகள் தேர்வில் ‘பேபி பம்ப்’ எனப்படும் கர்ப்ப வயிற்றை மறைக்காமல் தனக்குப் பிடித்தமான உடைகளை அணியும்போது சமூகத்தில் ஏற்படும் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்றாவதாக, மொழிப் பிரச்சனை காரணமாக மருத்துவரின் சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளைப் புரிந்து கொள்வதில் உள்ள சிரமங்களையும், நான்காவதாக, ஐரோப்பியக் குளிர்கால நிலைக்குப் பழகிய தனக்கு இந்தியாவின் கடுமையான வெப்பமும் ஈரப்பதமும் மிகுந்த அசௌகரியத்தைத் தருவதாகவும் விளக்கியுள்ளார்.
https://www.instagram.com/reel/Da8I1VIvPcR/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பல்வேறு விதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்தியாவின் தட்பவெப்பநிலை, உடலமைப்பு மற்றும் ‘கண் திருஷ்டி’ போன்ற பண்பாட்டு நம்பிக்கைகளின் காரணமாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன என விளக்கமளித்துள்ளனர். அதேவேளையில், சோஃபியாவின் இந்த நேர்மையான பகிர்வுக்குப் பலர் ஆதரவு தெரிவித்தும், புதிய சூழலில் கர்ப்ப காலத்தைக் கையாளும் அவருடைய முயற்சிகளைப் பாராட்டியும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
