தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இல்லத்தரசிகள் தங்களின் வீடுகளிலேயே மாடித்தோட்டம் அமைக்க உதவும் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இடுபொருள், காய்கறி விதை, பழச்செடி, நீரியல் தோட்டம் மற்றும் செங்குத்துத் தோட்டத் தொகுப்புகளுடன் நிழல்வலைக் குடில்களும் வழங்கப்படவுள்ளன. மேலும், சத்தான உணவை உறுதி செய்ய ‘தமிழ்நாடு தளிர் கீரைகள்’ திட்டத்திற்கு ரூ.1.20 கோடியும், பனை மர வளர்ப்பை ஊக்குவித்து பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைக்க ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், அவர்களின் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யவும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.9 கோடியும், 17,315 ஏக்கருக்கு விதைக் கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வசதிக்காக 8 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், விதை சுத்திகரிப்பு திறனை உயர்த்த ரூ.7.1 கோடியில் 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள், திரவ உயிர் உர உற்பத்திக்கு ரூ.3.56 கோடி மற்றும் மாவட்டந்தோறும் வேளாண் கண்காட்சிகள் நடத்த ரூ.3 கோடி எனப் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
