தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 92 வயதான மூத்த மகப்பேறு மருத்துவர் சூரி ஸ்ரீமதி, வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் இன்றும் மருத்துவச் சேவையாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 68 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இவர், தனது வாழ்நாளில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களைச் சுகப்பிரசவமாகவும் அறுவை சிகிச்சை மூலமாகவும் பார்த்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளார்.
92 வயதை எட்டிய போதிலும் ஓய்வு பெறாமல் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். அவசரக் காலங்களில் சிசேரியன் போன்ற கடினமான அறுவை சிகிச்சைகளையும் துல்லியமாகச் செய்து வரும் இவரது அளப்பரிய சேவையையும் மனஉறுதியையும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
