தமிழகத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை’ மூலம் வரலாறு காணாத வகையில் சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர்களில் சுமார் 15 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ள இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இருப்பினும், தவறுதலாகப் பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஜனவரி 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பெயர்களை மீண்டும் சேர்க்கத் தேர்தல் ஆணையம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை நடத்திய போதிலும், பொதுமக்களிடையே போதிய ஆர்வம் காணப்படவில்லை. இதுவரை சுமார் 39,000 பேர் மட்டுமே தங்களின் பெயர்களைச் சேர்க்க மீண்டும் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீக்கப்பட்ட 97 லட்சம் பேருடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமானதாகும். இது மக்களிடையே நிலவும் விழிப்புணர்வு குறைபாட்டைக் காட்டுவதோடு, 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
