“1 சீட் + உதயசூரியன் சின்னம்” அப்செட்டில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் வேல்முருகன்..? திடீர் பரபரப்பு..!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு (தவாக) வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, அந்த ஒரு தொகுதியிலும் தவாக வேட்பாளர் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என திமுக தலைமை நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் தவாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், தவாக தலைவர் வேல்முருகன் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கடந்த தேர்தலில் மதிக்கத்தக்க பங்களிப்பை வழங்கியும், இந்த முறை கூடுதல் இடங்கள் வழங்கப்படாதது மற்றும் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதி மறுக்கப்படுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கௌரவமான தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில், கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

   

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேல்முருகனின் இந்த அதிருப்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவாக தனது முடிவை இன்று மதியம் 1 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒருவேளை தவாக கூட்டணியில் இருந்து வெளியேறினால், அது திமுக கூட்டணியில் ஏற்படும் முதல் விரிசலாக அமையும் என்பதால், மதியம் வெளியாகவுள்ள அறிவிப்பை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.