‘ஜெம்’ கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி மீது தொடரப்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு, தற்போது அடுத்தடுத்த திருப்பங்களுடன் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. ஆரம்பத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை முடிக்க முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக 83 வயதான வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மற்றும் உதவியாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் மிக முக்கியத் திருப்புமுனையாக, சென்னை தேனாம்பேட்டை பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வீரமணி ஒரு சிறுமியுடன் நிர்வாண நிலையில் இருக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ ஆதாரங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோவை வைத்து வீரமணியை மிரட்டி சிலர் பல கோடிகளைப் பறிக்க முயன்றதாகவும், பணம் சரியாகப் போய் சேராததால் சாந்தி இந்த ஆதாரங்களை போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை அடுத்த கட்டத்திற்குச் சென்றபோது, வீரமணியிடம் கைப்பற்றப்பட்ட ரகசிய டைரி வழக்கில் புதிய பூதாகரத்தைக் கிளப்பியுள்ளது. அதில், வழக்கில் இருந்து தப்புவதற்காகவும், அதை கைவிடுவதற்காகவும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பல நூறு கோடிகள் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை தி.நகரில் உள்ள வீரமணியின் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, பென் டிரைவ்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சான்றுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
மறுபுறம், பாதிக்கப்பட்ட சிறுமிகளைக் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதுவரை 10 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தற்போது மேஜராகிவிட்ட அந்த பெண்களுக்கு சம்பவம் நடந்த இடங்களை நேரில் காண்பித்து, ரகசிய முறையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு பெண், தான் மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த காலத்தில் இந்த வழக்கை தவறாகக் கையாள முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முந்தைய விசாரணை அதிகாரிகளான உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக வெளிவரும் ரகசிய டைரி விவரங்கள், சிசிடிவி வீடியோக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவை ‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான வழக்கில் மிக வலுவான சாட்சியங்களாக மாறி, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதை உணர்த்துகின்றன.
