நாங்க ஒன்னும் மற்ற கட்சி தயவில வளரல… ஏன் இந்த எரிச்சல்..? திருமாவளவன் பதிலடி..!!

By Soundarya on வைகாசி 22, 2026

Spread the love

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தங்களின் சுயமரியாதையையும், சொந்த பலத்தையும் சுட்டிக்காட்டி திமுகவிற்கு மிகக் கடுமையான பதிலடியை அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணி ஆட்சியில் விசிக பங்கேற்பதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள விசிக தலைமை, “விசிக ஒன்றும் மற்ற கட்சிகளின் தயவில் வளர்ந்த கட்சி அல்ல” என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், கொள்கைக்காகவே திமுகவுடன் கரம் கோர்த்ததாகவும், நாங்களாக இன்னும் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூட இல்லை என்றும், அதற்குள் திமுகவினருக்கு ஏன் இந்த அவசரமும் எரிச்சலும் என்று விசிக கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் கொள்கைகள் மற்றும் சந்தர்ப்பவாதம் குறித்து விமர்சிப்பவர்களை நோக்கி, திமுகவின் பழைய வரலாற்றை விசிக எக்ஸ் (X) தளத்தில் மீண்டும் நினைவூட்டியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தங்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான சங் பரிவாருடன் (பாஜக) கடந்த காலத்தில் கூட்டணி வைத்த வரலாறு யாருடையது என்று விசிக சாடியுள்ளது. தங்களின் அரசியல் நகர்வுகளை விமர்சிப்பதற்கு முன்னால், திமுகவினர் தங்களின் சுயநலப் புத்தியையும், கடந்த காலக் கூட்டணிகளையும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று விசிக மிகத் தீவிரமாகக் குற்றம் சாட்டியுள்ளது.