“ஒரே நாளில் சரிந்த கோட்டை?”…. அண்ணாமலைக்காக பாஜகவை மொத்தமாக காலி செய்யும் முக்கிய நிர்வாகிகள்… அடுத்து நடக்கப்போகும் அதிரடி மாற்றம்….!

By Nanthini on ஆனி 5, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தற்போது மிகப்பெரிய பரபரப்பு தொற்றியுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, ‘அடுத்து நடக்கும் தமிழக பொதுத்தேர்தலில் கண்டிப்பாக நமது புதிய கட்சி போட்டியிடும்’ என்று அறிவித்து, அதற்கான ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை லிங்கையும் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 5 லட்சம் பேர் அவரது புதிய இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்த அரசியல் மாற்றத்திற்கு ஆதரவாக, பாஜகவில் நீண்ட காலம் பணியாற்றிய முக்கிய நிர்வாகிகள் பலரும் தற்போது தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலையுடன் கைகோர்த்து வருகின்றனர்.

   

இந்த வரிசையில், கோவை தெற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவரும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவருமான கே.வசந்தராஜன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக பூத் ஏஜென்ட், கொடி கட்டுதல், சுவரொட்டி ஒட்டுவது என அடிமட்ட தொண்டனாகத் தொடங்கி, மாவட்டத் தலைவர், நாடாளுமன்ற வேட்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்தவர் வசந்தராஜன். தமிழக பாஜகவின் தற்போதைய சூழ்நிலையில், ஊழலற்ற தமிழகத்தை உருவாக்கும் தனது சமுதாயப் பயணம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்டதாகக் கூறி அவர் விலகியுள்ளார்.

   

பாஜக மாநிலத் தலைவருக்கு வசந்தராஜன் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், “1998-ல் கிளைத் தலைவராக பாஜகவில் ஆரம்பித்து, 28 ஆண்டுகள் தாமரையுடன் வாழ்ந்திருக்கிறேன். வாஜ்பாய், அத்வானி, மோடி போன்ற மாமனிதர்களின் தலைமையில் பயணித்தது எனது புண்ணியம். ஆனால், கட்சிக்காகப் பாடுபட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதே எனது ஆவல். தற்போதைய சூழ்நிலையில் யாரையும் குறை கூறாமல், நான் உயிரிலும் மேலாக நேசித்த பாரதிய ஜனதா கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக நலன் சார்ந்த ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்கப் போவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

வசந்தராஜனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட முன்னாள் பாஜக தலைவரான வேதசுப்பிரமணியமும் தனது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் விலகியுள்ளார். தாம்பரத்தைச் சேர்ந்த இவரும் வசந்தராஜனைப் போலவே 1998 முதல் கடந்த 28 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு நிலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் ஆவார். அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவராகவும், பின்னர் தாம்பரம் தொகுதி அமைப்பாளராகவும் செயல்பட்ட வேதசுப்பிரமணியம், தனது விலகல் கடிதத்தை தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பியுள்ளார்.

அண்ணாமலை தனி கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பாஜகவின் மூத்த மற்றும் விசுவாசமான நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது தமிழக பாஜக தலைமைக்கும், டெல்லி மேலிடத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் பாமக, திமுக மற்றும் பிற கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களும், பிரபல தொழிலதிபர்களும் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், பாஜக நிர்வாகிகளின் இந்த அடுத்தடுத்த விலகல் தமிழக அரசியலில் அண்ணாமலையின் புதிய இயக்கம் ஒரு பிரம்மாண்ட சக்தியாக உருவெடுத்து வருவதைக் காட்டுகிறது.