விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் வன்னி அரசு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அண்மைக்காலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அமைச்சரவை நிலைப்பாடு குறித்துப் பேசிய ஆ.ராசா, அதில் இடம்பெற நினைப்பவர்களுக்கு வெட்கமில்லை என்று கூறியதற்குத் தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். ஆ.ராசா எதைப்பேச வேண்டும், எதைப்பேசக் கூடாது என்ற எந்தவொரு வரையறையும் இல்லாமல், தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக வன்னி அரசு குற்றம் சாட்டினார்.
மேலும், விசிகவினரை மட்டும் குறிவைத்துத் தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவதை ஆ.ராசா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய போக்குகளை திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் வன்னி அரசு வலியுறுத்தினார். கடந்த கால அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், 2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் வென்ற விசிக, பின்னர் திமுக ஆட்சி அமைவதற்குக் கொடுத்து வந்த ஆதரவை ஆ.ராசா மறந்துவிட்டாரா எனக் கேள்வி எழுப்பியதோடு, கூட்டணிக் கட்சிகளை அவமதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
