தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக வலுவான தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்கள் என்று தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சூசகமாக கூறியுள்ளார். இந்தக் கருத்து நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் NDA கூட்டணியில் இணைய உள்ளதா என்ற எதிர்பார்ப்பை தற்போது அதிகரித்துள்ளது.
பலமான நபர்கள் இணையப் போகிறார்கள், அந்த நபர் யார் என்பதை நீங்களே கருதலாம் என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டார். சில நாட்களுக்கு முன்பு கூட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜயின் கட்சி கொடி பறந்த போது பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது என்று சூசகமாக தெரிவித்து இருந்தார். இருந்தாலும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் NDA கூட்டணியில் இணைவது குறித்து எந்த ஒரு தகவலையும் மறுத்து விளக்கம் அளிக்கவில்லை. இதனால் ஒருவேளை விஜய் NDA கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
