கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று நிகழ்ந்த ஒரு கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து 16 பயணிகளுடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்த வேன் ஒன்று, மலைச்சாலையில் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவிலிருந்து வால்பாறைக்கு இயற்கை அழகை ரசிக்க வந்த இந்த சுற்றுலா குழுவினர், தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனர். வால்பாறை மலைச்சாலையில் உள்ள 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் பாய்ந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அப்பகுதி மக்களும், காவல்துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பலத்த காயமடைந்த எஞ்சிய 6 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
