சென்னை ஆளுநர் மாளிகையில் ‘வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்’ விழாவின் போது, திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இந்த காவி உடை திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்திய நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆளுநரின் செயலை கடுமையாக சாடியுள்ளார். திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்த ஆளுநரின் செயல் ஒரு மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம் என்று அவர் தனது கண்டனத்தை மிக ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பேசிய வைகோ, ஆளுநருக்கு என்ன திமிரும் அகம்பாவமும் இருந்தால் தமிழ்நாட்டிற்குள் வந்து, ஆளுநர் மாளிகையிலேயே அமர்ந்துகொண்டு திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பார் என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டை ஆளுநர் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டாரா என்று சாடிய அவர், இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
