நாடகத் துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை மணிமேகலை. அதன் பிறகு தன்னுடைய திறமையால் சினிமாவில் நுழைந்தார். குறிப்பாக இவர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் ஜீவாவின் அம்மாவாக நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. இவர் நண்பன், வடசென்னை மற்றும் அசுரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வரும் இவர் படங்கள் இல்லாத போது ஆண்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பகுதி நேரம் பாட்டு சொல்லிக் கொடுத்து வருகின்றார்.

இப்படியான நிலையில் இவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய காரை ஒருவர் ஏமாற்றி அடமானம் வைத்து விட்டதாக போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதாவது தனக்கு கார் ஓட்ட தெரியாததால் தன் மகன் கண்ணன் உதவியோடு படப்பிடிப்பு தளங்களுக்கு மணிமேகலை சென்று வந்துள்ளார். சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு தவணை முறையில் இந்த காரை அவர் வாங்கியுள்ளார். இப்படியான நிலையில் மகன் கண்ணனை நண்பர் ரத்தினவேல் என்பவர் 6 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரிடம் இந்த பணத்தை திருப்பி கேட்க அவரும் தருவதாக கூறி ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அங்கு சென்றதும் மும்பையில் தான் பணம் இருக்கு நீ போய் வாங்கிக்கோ என்று கண்ணனை அனுப்பி வைத்துவிட்டு இந்த பக்கம் அவர் கொண்டு வந்த காரை 6 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். இது குறித்து அவரிடம் திரும்ப வந்து கண்ணன் கேட்டதும் தெரியாது என்று கூறி சமாளித்துள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மணிமேகலை நான்கு மாதங்கள் கழித்து தஞ்சாவூருக்கு சென்று புகார் அளித்தார். அதன் பிறகு வழக்கு பதிவு செய்த போலீசார் சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை. இவ்வளவு நாட்கள் ஆகியும் இன்னும் காரை மீட்டுத் தரவில்லை எனவும் பயன்படுத்தாத காருக்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் கட்டி வருவதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் காவல்துறையினர் எனது காரை மீட்டு தர வேண்டும் என்று கண்ணீர் மல்க நடிகை மணிமேகலை பேட்டி அளித்துள்ளார்.
