தமிழ் சினிமாவின் கதை சொல்லல் முறையில் முத்திரை பதித்த திரைப்படங்களில் ஒன்று ஆட்டோகிராஃப். அதுவரை இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் சேரன் அந்த படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அவரோடு அந்த படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா மற்றும் கனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க செல்லும் சேரன், அவர் வாழ்வில் கடந்து வந்த நபர்களை சந்திப்பதே இந்த படத்தின் கதை. அதில் மையக் கதபாத்திரத்தின் பள்ளிப் பருவ காதல் மற்றும் கல்லூரி கால காதல் என கடக்கும் கதை, அதில் தோல்வியடையும் அந்த மனிதன் எப்படி தன்னுடைய வீழ்ச்சிகளில் இருந்து மீள்கிறான் என்பதே கதை.
இதை மிகவும் கவித்துவமாகவும் நாஸ்டாஜிக் அனுபவத்தோடும் உருவாக்கி இருந்தார் சேரன். அதனால் பெருவாரியான ஆண்களால் இந்த கதையோடு தொடர்புகொள்ள முடிந்தது. இதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பா விஜய் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல். வாழ்க்கையில் தோற்று அடுத்து என்ன என்று தெரியாமல் இக்கட்டான நிலையில் இருக்கும் ஒரு மனிதனை மீண்டெழச் செய்யும் வரிகள் கொண்ட பாடலாக அந்த பாடலை பா விஜய் எழுதியிருப்பார்.

#image_title
அந்த பாடலுக்காக பா விஜய் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனாலும் அந்த பாடல் குறித்து ஒரு சர்ச்சை உருவானது. அது என்னவென்றால் அந்த பாடலில் ஒரு இலக்கணப் பிழை உள்ளது என்பதுதான். ஒவ்வொரு பூக்களுமே என்று பன்மையில் வரக் கூடாது, ஒவ்வொரு பூவுமே என்று ஒருமையில்தான் வரவேண்டும் என சில விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பா விஜய் முன்னிலையில் கவிஞர் வாலியிடம் கேட்டுள்ளார். அதற்கு வாலி ” அதற்கு வாலி அய்யா ஆயிரம் நிலாக்களே வாருங்கள் என வராமல் ”ஆயிரம் நிலவே வா” என்று வருமென்றால் “ஒவ்வொரு பூக்களுமே” என்றும் வரலாம் என்றார். அதில் ஒன்றும் தப்பில்லை” என்று சொல்லிவிட்டாராம்.