சென்சாரை ஏமாற்றி எப்படியோ MGR பாடலில் அந்த வார்த்தையை வைத்த வாலி… எந்த பாடல்? என்ன வார்த்தை தெரியுமா?

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.

   

அதன் பிறகுதான் தன்னுடைய படங்களில் வாலியை பாடல் ஆசிரியராக பயன்படுத்த ஆரம்பித்தார் எம் ஜி ஆர். வாலி வந்த பின்னர் எம் ஜி ஆரின் பாடல்கள் தன்மை மாற ஆரம்பித்தன. தன்னுடைய கட்சிக் கொள்கைகளை எல்லாம் வாலியின் மூலம் பாடல் வரிகளாக இடம்பெறச் செய்தார் எம் ஜி ஆர். அப்படி இடம்பெற்ற ஒரு பாடல் வரியால் சென்சாரில் பிரச்சனை வரும் அளவுக்கு சென்றுள்ளது.

எம் ஜி ஆர் ஏவிஎம் நிறுவனத்துக்காக நடித்த ஒரே படம் அன்பே வா. இந்த படத்தில் எம் ஜி ஆர் காஷ்மீருக்கு செல்லும் பாடல் காட்சியில் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல் இடம்பெறும். அந்த பாடலை எழுதிய வாலி  இடையில் ‘உதய சூரியனின் பார்வையிலே உலகம் முழித்திக்கொண்ட வேளையிலே’எம் ஜி ஆரின் திமுக சின்னமான உதயசூரியனை இடம்பெறச் செய்துள்ளார். ஆனால் இந்த வார்த்தைக்கு சென்சாரில் சிக்கல் வருமோ என்ற சந்தேகமும் படக்குழுவினருக்கு இருந்துள்ளது.

எதிர்பார்த்தது போலவே சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பாடல் வரியை மாற்ற சொன்னார்கள். அப்போது உதய சூரியனை மாற்றி ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என மாற்றியுள்ளார் வாலி. ‘அதென்ன புதிய சூரியன்?’ எனத் தயாரிப்பாளர் கேட்க ‘படத்தில் எம்.ஜி.ஆர் பாடும்போது அது உதயசூரியன் என்றுதான் கேட்கும். தியேட்டரில் கைதட்டல் பறக்கும்’ என சொன்னார் வாலி. அவர் சொன்னது போலவே நடந்தது.