எதிர்பாராத ட்விஸ்ட்… அதிமுகவில் மீண்டும் இணையும் சசிகலா, டிடிவி தினகரன்?… எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த கே.சி.கருப்பணனின் அந்த ஒரு பேட்டி…!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பது குறித்த விவாதங்கள் அக்கட்சி தொண்டர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாகினர். நாளுக்கு நாள் கட்சி கரைந்து வரும் சூழலில், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தரப்பிலும் வலுத்து வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் அதிரடியான சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதிமுகவில் இருக்கும் அனைவரும் விரைவில் ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்ட அவர், யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம் என்றும், இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்த்தால் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை அதிமுகவில் இணைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

மேலும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளதை அவர் நினைவுகூர்ந்தார். அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில நாட்களிலேயே, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் செல்வதற்கு குதிரை பேரத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு சில ஆண்டுகள் அமைதியாக இருந்திருந்தால் கூட அதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் சாடியுள்ளார்.

   

தற்போது அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பெரும் வேதனையோடு இருப்பதாகத் தெரிவித்த கே.சி.கருப்பணன், அவர்களே மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் நம்பிக்கையோடு கூறியுள்ளார். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருமே தற்போது தனித்தனி கட்சிகளை நடத்தி வரும் வேளையில், அவர்கள் அதிமுகவுடன் தங்களது கட்சிகளை இணைப்பார்களா அல்லது அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக உற்றுநோக்கப்படுகிறது.