கடந்த ஆண்டு பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, “தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது” என்ற தங்களின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைக் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. தீவிரவாதத்திற்கு எதிராகப் பாகிஸ்தான் உண்மையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராது என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியாவின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக சர்வதேச அரங்கில் இவ்விவகாரத்தை எழுப்பி வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தலைமையில் நடைபெற்ற 276-வது கார்ப்ஸ் கமாண்டர்கள் மாநாட்டில், சிந்து நதியின் நீரை இந்தியா தடுத்து நிறுத்துவது அல்லது திசைதிருப்புவது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும், அதை எதிர்கொள்ள ராணுவம் முழு தயார் நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்திற்காக இந்தியாவுடன் போர் செய்ய வேண்டியிருந்தாலும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசியல் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளின் கட்டுப்பாடு இந்தியாவுக்கும்; சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளின் நீர்ப் பயன்பாடு பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஒப்பந்தம் இந்தியாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து நதிகளின் மீதும் தற்காலிகமாக இந்தியாவுக்கே முழு உரிமை கிடைத்துள்ளது. இதன் காரணமாக, வெள்ள எச்சரிக்கை உள்ளிட்ட அத்தியாவசியத் தகவல்களைப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சாவல்கோட், ரட்லே, புர்சார், பகல் துல் உள்ளிட்ட பல நீர்மின் திட்டங்களை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது பாகிஸ்தானுக்குப் பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயக் கட்டமைப்பில் சுமார் 80 முதல் 90 சதவீதம் வரை சிந்து நதி நீரையே நம்பி இருக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை இந்த நீர் விவகாரத்தில் இந்தியா இறங்கி வராது என்பதால், பாகிஸ்தான் தற்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் போர் அச்சுறுத்தல் என இருமுனை நெருக்கடியில் சிக்கியுள்ளது.
