துபாய் டியூட்டி ப்ரீ லாட்டரியில் லெபனானைச் சேர்ந்த 53 வயது கட்டுமானத் தொழிலதிபரான அண்டோனி லபாகிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ 9.5 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. பெய்ரூட்டில் தனது சகோதரியுடன் காபி குடித்துக்கொண்டிருந்தபோது இவருக்கு இந்த இன்ப அதிர்ச்சி தேடிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2004-ல் பிஎம்டபிள்யூ காரும், 2018-ல் 1 மில்லியன் டாலர் பரிசும் வென்ற இவர், துபாய் லாட்டரி வரலாற்றில் இரண்டு முறை 1 மில்லியன் டாலர் வென்ற 12-வது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த முறை வென்ற தொகையை தனது சொந்த நாடான லெபனானுக்கு மாற்றியபோது ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் அப்பணத்தை முழுமையாக இழந்ததாக அண்டோனி லபாகி வேதனை தெரிவித்தார். ஆனால், அந்தத் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அவர், இந்த முறை இந்த ஜாக்பாட் தொகையை மிகவும் பாதுகாப்பான நகரான துபாயிலேயே முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
துபாயில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி, தனது கட்டுமானத் தொழிலை மேலும் விரிவுபடுத்தி குடும்பத்துடன் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துபாய் தனக்கு உலகத்தையே பரிசாக அளித்துள்ளதாகக் கூறியுள்ள லபாகி, இனிவரும் காலங்களில் தொடர்ந்து மாதந்தோறும் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வியக்கத்தக்க அதிர்ஷ்டச் செய்தி தற்போது இணையத்தில் பலரால் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
