அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தெற்கு ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணம், சிரிக் மாவட்டத்தில் உள்ள குஹெஸ்டாக் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில், எதிர்பாராத நேரத்தில் அமெரிக்கப் படைகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த பயங்கரத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய செஞ்சிலுவை சங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடந்த இடத்தில் பரவலான இடிபாடுகளும் பெருஞ்சேதங்களும் ஏற்பட்டிருப்பதை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. பின்னணியில் பொதுமக்களின் அலறல் சத்தத்துடன் காட்சிப் பதிவுகள் வெளியாகியுள்ளன. குடியிருப்புப் பகுதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தச் சம்பவத்தை ஒரு “போர்க்குற்றம்” என ஹோர்மோஸ்கான் மாகாண பாதுகாப்புப் பிரிவு துணை ஆளுநர் அஹ்மத் நஃபீசி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்புக் குழுக்கள் விரைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருகின்றன.
உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்மஸ் ஜலசந்தியின் ஓரத்தில் இந்தச் சிரிக் மாவட்டம் அமைந்துள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஏவுகணைகளை ஏவியதற்கும், நீர்வழிப்பாதையில் கண்ணிவெடிகளைப் புதைக்க முயன்றதற்கும் பதிலடியாகவே தெற்கு ஈரான் மற்றும் கெர்மான் மாகாண விமான நிலையம் மீது இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முயன்றால் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஈரான் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் சர்தார் ஹொசைன் மொஹேபி கூறுகையில், “அமெரிக்கா தனது இந்த நடவடிக்கைகளுக்காகப் பெரிதும் வருந்தும் என்றும், ஆக்கிரமிப்புப் படைகளுக்குக் கடுமையான தண்டனை காத்திருக்கிறது” என்றும் எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் இந்த மோதல் சூழல், மத்திய கிழக்கு பகுதியில் பெரும் அமைதியின்மையையும் உலகளாவிய பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
