ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு இன்னும் தணியவில்லை. பாகிஸ்தான் தூதுவர் வழியாக ஈரான் அனுப்பிய புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார். ஈரானின் நிபந்தனைகள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும், அணு ஆயுத விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது.
இந்த அரசியல் மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு அதன் விலை 50 சதவீதம் வரை எகிறியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும், ஈரானின் பிடிவாதமான பதிலடிகளும் உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து வருகின்றன. ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தொடர்ந்து ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு வருகிறது. இந்த இரு நாடுகளின் அதிகாரப் போட்டியால் சாமானிய மக்கள் எரிபொருள் விலை உயர்வால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
