அமெரிக்காவின் பிளான் டோட்டல் சொதப்பல்… வேறு வழியின்றி ரஷ்யாவுக்கு கதவைத் திறந்த ட்ரம்ப்… உலக அரசியலில் பெரும் மாற்றம்….!

By Nanthini on சித்திரை 18, 2026

Spread the love

ஈரான் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை ஒரு மாத காலத்திற்குத் தளர்த்துவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) எடுத்துள்ள இந்த முடிவின்படி, ஏப்ரல் 17ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்பாகக் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு பொருந்தும். உலக நாடுகளின் கடும் நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டே அமெரிக்கா இந்தத் தற்காலிகச் சலுகையை அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.

இந்த ஒரு மாத கால அவகாசத்தில், ஏற்கனவே கப்பல்களில் உள்ள சரக்குகளை இறக்குமதி செய்யவும் அல்லது விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் நலன் கருதி சில துணைச் சேவைகள் மீதான தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரஷ்யக் கப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்துதல், அவசரக் கால பழுதுபார்ப்புகள், காப்பீடு மற்றும் சரக்குகளைக் கையாளுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது சர்வதேச எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையைச் சற்று சீரமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

இருப்பினும், இந்தத் தளர்வுகளுக்கு இடையே அமெரிக்கா சில கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஈரான், வட கொரியா, கியூபா மற்றும் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா பகுதிகளைச் சேர்ந்த நபர்களுடனோ அல்லது நிறுவனங்களுடனோ எவ்விதப் பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அனுமதியானது ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிற அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதையும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

   

இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் வலுவான அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்து, அமெரிக்காவின் நட்பு நாடுகளே அந்நாட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, டொனால்ட் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கைகளைச் சில நாடுகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ள சூழலில், நிலைமையைச் சீராக்க ஈரானும் பிடிகொடுக்கவில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், சர்வதேச உறவுகளைத் தக்கவைக்கவும் ரஷ்யா மீதான தடையைச் சற்று தளர்த்துவதைத் தவிர அமெரிக்காவிற்கு வேறு வழியில்லாமல் போனது.