உலகின் முன்னணி சமூக ஊடக நிறுவனமான மெட்டா, 2026 ஆம் ஆண்டில் தனது பணியாளர் எண்ணிக்கையில் பெரும் குறைப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. மே 20 முதல் தொடங்கவுள்ள முதற்கட்ட பணிநீக்க நடவடிக்கையில், உலகளவில் சுமார் 10 சதவீத ஊழியர்கள், அதாவது ஏறத்தாழ 8,000 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் எனத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பல நூறு பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வரும் மார்க் ஜுக்கர்பெர்க், நிறுவனத்தின் செயல்பாடுகளை முழுமையாக தானியங்கி முறைக்கு மாற்றும் நோக்கில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இந்த பணிநீக்கத்திற்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது ஏஐ தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சிதான். சிக்கலான கோடிங் வேலைகள் முதல் அன்றாட நிர்வாகப் பணிகள் வரை ஏஐ மூலமாகவே செய்ய முடியும் என்பதால், மனித ஊழியர்களின் தேவை பெருமளவு குறைந்துள்ளது. சமீபத்தில் ஸ்னாப் இன்க் நிறுவனம் தனது 65 சதவீத கோடிங் வேலைகளை ஏஐ மூலம் முடிப்பதாகக் கூறி 1,000 ஊழியர்களை நீக்கியது இதற்கு ஒரு சான்றாகும். மெட்டா நிறுவனமும் இதே பாணியைப் பின்பற்றி, சிறிய மற்றும் திறமையான குழுக்களைக் கொண்டு அதிகப்படியான வருவாயை ஈட்டவும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் திட்டமிடுகிறது.
மெட்டாவின் இந்த பணிநீக்கப் படலம் இதோடு முடிந்துவிடப் போவதில்லை. ஆண்டின் இரண்டாம் பாதியில் மேலும் ஒரு சுற்று பணிநீக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 2026 ஆம் ஆண்டில் மட்டும் மெட்டாவின் மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் பேர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. மெட்டா மட்டுமல்லாது அமேசான் ஏற்கனவே 30,000 பேரையும், பிளாக் இன்க் தனது 50 சதவீத ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளன. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சுமார் 73,000 டெக் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழல், தொழில்நுட்பத் துறையில் நிலவும் பெரும் மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் ஒருபுறம் பணிகளை எளிதாக்கினாலும், அதற்கான பெரும் முதலீடுகள் நிறுவனங்களின் நிதி நிலையில் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. அதோடு உலகளாவிய போர் பதற்றம், பணவீக்கம் மற்றும் உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக நிறுவனங்கள் தங்கள் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இத்தகைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், செலவினங்களைக் குறைத்து லாபத்தை நிலைநிறுத்த டெக் நிறுவனங்கள் மனித ஊழியர்களைக் காட்டிலும் ஏஐ தொழில்நுட்பத்தையே அதிகம் நம்பத் தொடங்கியுள்ளன.
