புஷ்பா திரைப்படம் மூலமாக பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் செம்மர கடத்தல் காரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்து அசத்தியுள்ளனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் பக்கா கமர்சியல் படமாக இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் செய்த இந்திய சினிமாவை அதிர வைத்தது. அதனைப் போலவே கே ஜி எஃப் 2, RRR, கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்கள் 16 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தன. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்களும் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியது. ஆனால் அதிரடியாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒட்டுமொத்த தேசமும் இந்த படத்தை தற்போது கொண்டாடி வரும் நிலையில் லெஜெண்ட் சரவணா நடிப்பில் உருவான லெஜன்ட் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்த வீடியோவை பகிர்ந்து, அதில் இரண்டாவது முறையாக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
