டேட்டிங் செயலியான ‘டிண்டர்’ மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆண்களைத் வலையில் வீழ்த்தி, பல கோடி ரூபாய் பணம் பறித்து வந்த பல்லவி சிங் ராஜ்புத் தலைமையிலான மோசடி கும்பலின் அதிர்ச்சி பின்னணி பிரயாக்ராஜில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஸ்வீட்டி திவாரி’ உட்பட பல்வேறு போலிப் பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி நட்பு ரீதியாகப் பழகும் இந்தப் பெண், பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து அந்தரங்கமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களைப் பயமுறுத்தி, லட்சக்கணக்கில் பணத்தைப் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தைரியமாக அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்த நெட்வொர்க்கின் பகீர் உண்மைகள் அம்பலமாகின. பணத்தைக் கொடுக்க மறுப்போரை பொய் கற்பழிப்பு வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் மாட்டிவிடுவதாக மிரட்டியே, இதுவரை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் 6 கோடி ரூபாய்க்கும் மேல் இவர்கள் சுருட்டியுள்ளனர். மேலும், இந்தச் சதித்திட்டத்தின் விளைவாக ஏற்கனவே ஐந்து நிரபராதிகள் பொய் வழக்குகளில் சிறைக்குச் சென்றுள்ள அதிர்ச்சித் தகவலும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் பல்லவி சிங்கிற்கு உடந்தையாகச் செயல்பட்ட மேலும் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, கட்டுக் கட்டாகப் பணத்துடன் இந்தப் பெண் படுக்கையில் இருக்கும் படங்களும், கையில் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. இணைய வழியில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
