சென்னையை அடுத்த எண்ணூர் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த 18 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த 24-ஆம் தேதி பிரசவ வலியால் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு கழிவறைக்குச் சென்ற அவருக்கு எதிர்பாராதவிதமாகத் தானாகவே பிரசவம் நிகழ, அருகில் பச்சிளம் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததாகக் கூறி, மேல் சிகிச்சைக்காக உடனடியாக ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவொற்றியூர் போலீசாரின் விசாரணையில், எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருடனான காதலின் காரணமாக கர்ப்பமடைந்த அப்பெண், விஷயம் பெற்றோருக்குத் தெரியக்கூடாது என்பதற்காக அதனை மறைத்து வந்துள்ளார். திருமணம் செய்யாவிட்டால் தன் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்ற அச்சத்தில், முன்னதாகக் கருக்கலைப்பு மாத்திரைகளையும் அவர் உட்கொண்டுள்ளார். எனினும் காலம் கடந்துவிட்டதால், குழந்தை பிறந்தவுடன் அதைக் கொன்றுவிட வேண்டும் என்ற முடிவோடு மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
மருத்துவமனைக் கழிவறையில் பிரசவம் நிகழ்ந்ததும், யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண் தொப்புள் கொடியைத் தானே அறுத்துள்ளார். பின்னர், குழந்தையைக் கொடூரமாகக் கொல்ல முயன்றபோது முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் செய்த செயல்களால் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, குழந்தையின் முகத்திலிருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டனர்.
அந்தப் பரிசோதனை அறிக்கையில் குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதியானதால், இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. திருமணமாகாமல் குழந்தை பிறந்தால் சமூக அவமானம் ஏற்படும் என்ற அச்சத்தில் இந்தப் பயங்கரச் செயலில் அப்பெண் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பெண், சிகிச்சை முடிந்தவுடன் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
