தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் செயின்சா இயந்திரத்தால் மாணவியைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஆசிரியர் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், உள்ளே நுழைந்த 20 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த செயின்சாவை எடுத்து மாணவியை நோக்கிப் பாய்ந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் மாணவியின் கழுத்தில் கொடூரமான முறையில் அவர் நடத்திய தாக்குதலில், அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் வகுப்பறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தாக்குதலில் மற்றொரு மாணவியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலையாளி நடத்திய திடீர் தாக்குதலால் அதிர்ந்துபோன சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
