நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் 33-வது நாளை எட்டியுள்ளது. காவல்துறையின் தடியடியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து திரளும் கூட்டம், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக கடந்த 25 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்கிறார். மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்கத் தன் உயிரைப் பணயம் வைத்துள்ள அவரது தியாகம், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “சோனம் வாங்சுக்கின் உயிர் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது; எனவே அவர் தனது உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், “மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் மீது காவலத்துறை இவ்வளவு கொடூரமான தாக்குதலை நடத்திய பிறகும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் வெற்றிகளையும் பேரணிகளையும் மட்டுமே கொண்டதல்ல, மாறாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பதில் சொல்லும் கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு என்பதைப் போராட்டத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தேசியச் செய்தி தொடர்பாளர்கள், “இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய இளைஞர் இயக்கமாக உருவெடுத்துள்ளது. கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வெறும் ஆரம்பகட்ட முன்னோட்டம் மட்டுமே” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மத்திய அரசு உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், நாடு முழுவதிலும் இருந்து மேலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை நோக்கிப் படையெடுப்பார்கள் என்றும், சிறைவாசம் என்பது தங்களின் போராட்டத்திற்குப் ஒரு சிறிய விலையே தவிர, எந்தச் சூழலிலும் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
