உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்குடும்பம், தந்தை வேலை பார்க்கும் கட்டிடத்திலேயே தங்கியிருந்த நிலையில், நள்ளிரவில் சிறுமியைத் தூக்கிச் சென்ற மர்ம நபர் அருகில் உள்ள பூங்காவில் வைத்துச் சித்திரவதை செய்துள்ளான். குழந்தையைத் தாக்கியதுடன், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளான்.
இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியைப் பெற்றோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆரம்பத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தையைத் தூக்கிச் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளதால், அந்த மர்ம நபரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
