“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

By Nanthini on சித்திரை 18, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த செங்கோட்டையனை மிகக்கடுமையாகச் சாடினார். செங்கோட்டையன் தன்னை “மலைப்பாம்பு” என விமர்சித்ததற்குப் பதிலடி கொடுத்த பழனிசாமி, “அவர் தரம் தாழ்ந்து பேசுவதாகவும், மரியாதை கொடுக்கத் தகுதியற்றவர்” என்றும் ஆவேசமாகக் குறிப்பிட்டார். செங்கோட்டையன் திமுக-வின் ‘பி டீம்’ ஆகச் செயல்படுவதை தான் முன்னரே கண்டறிந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோது அவரது மனைவியும் மகனும் நேரிடையாக ஜெயலலிதாவைச் சந்தித்துப் புகார் அளித்ததாகத் தெரிவித்தார். “ஒரு கிளைச் செயலாளர் மீது கூட வராத கேவலமான புகாரைச் செங்கோட்டையன் மீது அவரது குடும்பத்தினரே கொடுத்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மா, இப்படிப்பட்ட ஒருவரைத் தேடிப் பிடித்து அமைச்சராக்கியது எனது தவறு என்று வருத்தப்பட்டார்” எனப் பகிரங்கமாக மேடையில் பேசினார்.

   

செங்கோட்டையனின் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேசிய பழனிசாமி, “சட்டமன்றத்தில் திமுக-வை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவர் இவர். சொந்தத் தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களில் ஜெயலலிதா படம் இல்லை எனப் பொய்யான காரணங்களைக் கூறிப் புறக்கணித்துவிட்டு, திமுக-வின் திட்டங்களில் மட்டும் பங்கேற்றார்” என்றார். மேலும், செங்கோட்டையன் தன்னிடம் அழுது புலம்பி, கெஞ்சித் தான் அமைச்சர் பதவியைப் பெற்றார் என்றும், அவர் செய்த தவறுகள் குறித்த அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக எடப்பாடி எச்சரித்தார்.

   

இறுதியாக, “என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியில் விட்டால் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் வீதிகளில் நடமாட முடியாது, அந்தளவிற்கு அசிங்கமாகிவிடும்” என எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி, வாய் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டாம் என அறிவுறுத்தினார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இரு மூத்த தலைவர்களுக்கு இடையேயான இந்த மோதல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.