பெங்களூருவில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற போர்வையில் பெண் ஒருவர் வரவழைக்கப்பட்டு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சோமசேகர், அமரேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேரை தலகட்டபுரா காவல்துறையினர் சனிக்கிழமை அன்று கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சோமசேகர் என்ற நபருக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. கடந்த ஜூன் 30 அன்று, அந்தப் பெண்ணின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சோமசேகர் அவரை தலகட்டபுரா பகுதிக்கு அழைத்துள்ளார். அங்கு தனது நண்பர்கள் நான்கு பேரையும் வரவழைத்த சோமசேகர், அனைவருமாகச் சேர்ந்து அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் ஒன்றாக உணவு அருந்திய பிறகு, ஐந்து பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு ஒரு குளிர்பானத்தைக் கொடுத்துள்ளனர். அதை அருந்திய சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணுக்குக் கடுமையான தலைசுற்றலும் மயக்கமும் ஏற்பட்டு, அவர் தனது சுயநினைவை இழக்கத் தொடங்கியுள்ளார்.
அப்பெண் அரை மயக்க நிலையில் இருந்த சமயம் பார்த்து, ஐந்து பேரில் ஒருவரான அமரேஷ் என்பவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்; மற்ற நான்கு பேரும் வெளியே கூடத்தில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. சுயநினைவு திரும்பியதும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் அவருக்கு உரிய ஆலோசனைகளையும் ஆறுதலையும் வழங்கி விரிவான வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். தற்போது குற்றம் சாட்டப்பட்ட அமரேஷ், சோமசேகர் உள்ளிட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
