காவிரி நீர் உரிமையை மீட்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், மேகதாது அண கட்ட முயலும் கர்நாடக அரசு மற்றும் அதற்குத் துணைபோகும் மத்திய அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரிப் பிரச்சினையில் தவெக அரசு முற்றிலும் செயலழிந்து விட்டதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். பலவீனமான அரசு தமிழகத்தில் அமைந்திருப்பதாலேயே கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாது அண கட்டத் துணிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆளும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவையில் உள்ளவர்கள் அனைவரும் பொறுப்பின்றி நடந்து கொள்வதாகச் சாடினார். மக்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அமைச்சர்களும் முதலமைச்சரும் ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் வெளியிடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, காவிரிப் பிரச்சினையைப் பற்றிப் பேசாமல் திசைதிருப்பும் நோக்கிலேயே முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயிலில் சென்று ஆய்வு நடத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார் என்றும், அதுவும் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களையே அவர் ஆய்வு செய்து வருகிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் போராடச் சென்ற தமிழக விவசாயிகள் மகாராஷ்டிராவில் இறக்கிவிடப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடப்பதால், முதலமைச்சர் விஜய் இதுவரை ‘பாஜக’ என்ற சொல்லைக்கூடப் பயன்படுத்த அஞ்சி நடுங்குகிறார் எனக் குற்றம்சாட்டினார். தேர்தலுக்கு முன்பாக “அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறப்பேன்” என்று கூறிய விஜய், இந்த ஜென்மத்திலேயே விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறியத் தவறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் நலனைக் காக்கத் தவறிய ஆளும் தவெக அரசை எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக கடுமையாகச் கேள்வி கேட்கும் என்று எச்சரித்தார். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில், அவர்களுக்கான உரிமைகளைப் போராடிப் பெற திமுக தொடர்ந்து முன்னிற்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.
