தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான 35 பேர் கொண்ட அமைச்சரவை செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் முதல்முறை அமைச்சர்கள் என்பதால், அவர்களின் நிர்வாகத் திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ‘தூய்மையான நிர்வாகமே இலக்கு’ என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், தவறு செய்யும் அமைச்சர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை பாயும் என்று ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, புகார்களில் சிக்கியுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் (காங்கிரஸ்), சமூக நலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் ஆகிய 4 பேரின் பதவிகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) ஆகியோரின் துறை சார்ந்த செயல்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. அதேபோல, சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள வன்னி அரசுக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமாரவேல் போன்ற மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வரவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவிலோ இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
