சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் விஜய், திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்குப் பதிலளிக்க அனுமதி கோரி திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த வியாழக்கிழமையன்று சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து ஆதாரங்களுடன் 15 கேள்விகளை முன்வைத்துத் தான் உரையாற்றியதை நினைவுகூர்ந்தார். முதலமைச்சர் தன் உரையின் முதல் 15 நிமிடங்கள் காவல்துறையின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டதை திமுக அமைதியாகக் கேட்டதாகக் கூறிய அவர், அதன்பின்னர் எவ்வித ஆதாரமுமின்றி கட்சியின் வெளிக்கூட்டப் பேச்சுகளை அவைக்குறிப்பில் பதிவேற்றும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கியதாகக் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதை விவரித்த உதயநிதி ஸ்டாலின், ஆரம்பத்தில் “எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு தருகிறேன்” என்று உறுதியளித்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், திடீரென ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்த பிறகு தனது நிலையை மாற்றிக்கொண்டதாகத் தெரிவித்தார். “இல்லை, இல்லை.. அனுமதிக்க முடியாது” எனக் கூறி வாய்ப்பை மறுத்தது யாரோ கொடுத்த அழுத்தத்தினால் தான் நடந்தது என்று அவர் சாடினார்.
சபாநாயகரின் இந்தச் செயல்பாட்டை கடுமையாக விமரிசித்த உதயநிதி ஸ்டாலின், பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்படாமல் தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கும் முழுக்க முழுக்க “ஜால்ரா” அடித்து செயல்படுவதாகச் சாடினார். முதலமைச்சர் விஜய்யே வாய்ப்பு தரச் சொல்லியும் பேரவைத் தலைவர் மறுத்தது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், திமுகவின் குரலை அவையில் நசுக்கப் பார்ப்பதாகவும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
