தமிழகத்தில் தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக்குழு கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்துள்ளது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமை தாங்கினார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இதில் பங்கேற்க வேண்டிய நிலையில், தம்மால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் முன்கூட்டியே அரசுக்கு தகவல் அனுப்பிவிட்டு கூட்டத்தை தவிர்த்துள்ளார்.
மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் காலியிடங்களை நிரப்புவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் தலைமையிலான குழு தகுதியான விண்ணப்பதாரர்களைப் பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி முடிவெடுக்கவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவரின் வருகை இல்லாமல் முதல்வர் விஜய் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்று ஒரு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்களின் பெயர்களை இறுதி செய்தனர்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இதுபோன்ற தேர்வுக்குழு கூட்டங்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலினும் அதே அரசியல் பாதையைப் பின்பற்றி இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார். முதல்வரை நேரடியாகச் சந்தித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்வதைத் தவிர்க்கவே அவர் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவரின் பங்கேற்பு இல்லாமலேயே தேர்வுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட ஐந்து நபர்களின் பட்டியலானது தற்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்தவுடன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் தங்களது பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
